×
Saravana Stores

மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு : அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!!

கடலூர் :விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கும். பல்வேறு நிறுவனங்களில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடமை தொடர்பான விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்கிட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்திட ஏதுவாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விவரங்கள், அவர்களுடைய நில உடமை விவரங்கள், மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு மற்றும் கிராம வரைபடங்களில் புவியியல் குறியீட்டினை இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் கிராம அளவில் பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் முறை கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு 2024-25 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீட்டினை முழுமையாக மேற்கொள்ள வேளாண்மை உழவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. இக்கணக்கீட்டு பணிக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களோடு கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வேளாண்மை கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 17,12,765 சர்வே உட்பிரிவுகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் நெல் குறுவை பருவத்தில் 38,440 எக்டர், சம்பா பருவத்தில் 1,25,749 எக்டர். நவரை பருவத்தில் 11,050 எக்டர் கம்பு 5,420 எக்டர்.மக்காச்சோளம் 26.040 எக்டர். வரகு 1,250 எக்டர். உளுந்து 41,250 எக்டர். பச்சைபயிர் 11,750 எக்டர். எல் 3,468 எக்டர். பருத்தி 4,506 எக்டர். கரும்பு 14,850 எக்டர். முந்திரி 29,460 எக்டர். வாழை 5,620 எக்டர், மரவள்ளி 4,515 எக்டர். கொய்யா 1,175 எக்டர். காய்கறிகள் 6.100 எக்டர். தென்னை 1,765 எக்டர், மா 458 எக்டர் மற்றும் பிற பயிர்கள் 3,13,621.75 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த 06.11.2024 அன்று தமிழக அளவில் 24 மாவட்டங்களில் 48 கிராமங்களில் 47 வேளாண்மை கல்லூரிகளை சார்ந்த 3,585 மாணவர்கள் மூலம் முன்னோட்ட ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி வட்டாரம், ஆவட்டி கிராமத்தில் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் திட்டக்குடி வேளாண்மை கல்லூரி மாணவர்களும் இணைந்து மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு தொடர்பான முன்னோட்ட ஆய்வு பணி மேற்கொண்டனர்.

மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கருங்குழி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார் .கருங்குழி கிராமத்தில் 351 சர்வே எண்களும் 4,938 உட்பிரிவுகள் உள்ளது. மேலும் அக்கிராமத்தில் 363 எக்டரில் சம்பா நெல், 11 எக்டர் கரும்பு மற்றும் மா. எலுமிச்சை, வெண்டை முதலிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக மங்களூர் மற்றும் நல்லூர் வட்டாரங்களில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி முழு அளவில் தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் திருச்சி மாவட்டம், குமுலூர் வேளாண்பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கடலூர் மாவட்டம், திட்டக்குடி J. வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஈடுபட உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி நவம்பர் மாத இறுதிக்குள் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு : அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த...