×
Saravana Stores

ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை :ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொறுத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் திரு. ராகேஷ் கக்காணி அவர்கள் சு வெங்கடேசனின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல; அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும்,” என்று தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த விளக்கத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். தனது x தளத்தில், “ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக நான் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு. புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்கு பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

The post ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...