×
Saravana Stores

குமரியில் மாஜி ராணுவ வீரரிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் கைது

*சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

நாகர்கோவில் : குமரியில் மாஜி ராணுவ வீரரிடம், வீடு கட்டுவதற்கான தடையின்மை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை காவலர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்தும் வன அதிகாரி உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா பிள்ளை (47).

ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் குலசேகரபுரம் அருகே சுமார் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலத்தில் வீடு கட்ட மகாராஜா பிள்ளை முடிவு செய்தார். இந்த பகுதி மலையிட மனையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், இங்கு வீடு கட்ட வனத்துறையிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். எனவே தடையின்மை சான்று கேட்டு, குமரி மாவட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

கடந்த 16.9.2024 அன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து வன பாதுகாவலர் பால்ராஜ் (56) என்பவர், மகாராஜா பிள்ளையை தொடர்பு கொண்டு, நிலம் தொடர்பான விபரங்களை கேட்டார். வன சரகருடன் நேரில் வந்து இடத்தை பார்வையிடுவோம் என கூறினார். பின்னர் 27.10.2024 அன்று நிலத்தை பார்வையிட வந்திருப்பதாக, பால்ராஜ் கூறினார். அன்றைய தினம் மகாராஜ பிள்ளை, திருவனந்தபுரத்துக்கு சென்று இருந்தார். எனவே தனது சகோதரரை அனுப்பி சம்பந்தப்பட்ட நிலத்தை காட்ட செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் மகாராஜ பிள்ளையை தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் பணத்துடன், மாவட்ட வன அலுவலகத்துக்கு வந்து தடையின்மை சான்றை பெற்று செல்லலாம் என பால்ராஜ் கூறினார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத மகாராஜா பிள்ளை, இது குறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், மகாராஜா பிள்ளையிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, வனத்துறை அலுவலகம் அருகே ரகசியமாக நின்றனர்.

மகாராஜா பிள்ளை பணத்துடன் வனத்துறை அலுவலத்துக்கு சென்றார். வனத்துறை அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள அறையில் அமர்ந்தவாறு அந்த பணத்தை பால்ராஜ் வாங்கினார். அப்போது கையும், களவுமாக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் பால்ராஜ் மற்றும் அந்த அறையில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்ட பால்ராஜிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், பின்னர் அவரை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட பால்ராஜை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உடனடியாக உத்தரவிட்டார்.

மேலும் ஒருவர் சஸ்பெண்ட்

இதே போல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த அறையில் பறவைகள் பாதுகாவலர் இந்திரன் என்பவரும் உடன் இருந்தார். அவர் வன அலுவலத்துக்கு வர வேண்டியதில்லை. அவர் சம்பந்தமில்லாமல் அலுவலகத்துக்கு வந்தது ஏன்? என விசாரணை நடத்திய வன அலுவலர் பணி நேரத்தில் அலட்சியமாக இருந்ததாக கூறி இந்திரனையும் சஸ்பெண்ட் செய்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆவார். பறவையிட பாதுகாப்பு பணிக்காக இவர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்ச வழக்கிற்கும், இந்திரனுக்கும் எந்த தொடர்பும் இல்ைல என போலீசார் கூறினர்.

The post குமரியில் மாஜி ராணுவ வீரரிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Maji ,Kumari ,NAGARGO ,MAJI MILITARY ,Kumari District ,Maji Army ,
× RELATED மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில்...