×

பூங்காவில் இரும்பு ராடு உடைந்து ராட்சத ராட்டிணத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி

*மற்றொரு பெண் படுகாயம்

திருமலை : திருப்பதி அடுத்த திருச்சானூரில் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டிணத்தில் விளையாடியபோது இரும்பு ராடு உடைந்ததில் இளம்பெண் கீழே விழுந்து இறந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த திருச்சானூரில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

இங்கு பொதுமக்களை மகிழ்விப்பதற்காக தனியார் நிறுவனம் சார்பில் விளையாட்டுகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று முன்தினம் பூங்காவுக்கு ஏராளமான மக்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அப்போது அங்குள்ள ராட்சத ராட்டினத்தில் பெண்கள், குழந்தைகள், வாலிபர்கள் என பெரும்பாலானோர் விளையாடி மகிழ்ந்தனர்.

அவ்வாறு ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு இரும்பு ராடு உடைந்தது. இதனால் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இருக்கை சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. அந்த இருக்கையில் அமர்ந்திருந்த திருப்பதி சுப்பாரெட்டி நகரை சேர்ந்த லோகேஸ்வரி(22) என்பவர் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த கவுதமி(19) என்பவர் படுகாயம் அடைந்தார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பூங்காவில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் ராட்டிணம் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்டிண உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post பூங்காவில் இரும்பு ராடு உடைந்து ராட்சத ராட்டிணத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati ,Tiruchanur ,Andhra Pradesh ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச்...