×

ஏரிக்குள் கார் பாய்ந்து 3 பேர் பரிதாப சாவு

ஓசூர்: ஓசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐடி ஊழியர் உட்பட 3பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உமாசங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மகேஷ் (25), கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஐடி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர்கள், ஓசூர் ஆவலப்பள்ளி சாலை ஜிகேடி நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் லிண்டோ (25), ஓசூர் சின்னஎலசகிரியை சேர்ந்த அங்கப்பா மகன் யோகேஸ்வரன் (25) ஆகியோருடன், கடந்த 30ம் தேதி இரவு காரில் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் அடுத்துள்ள வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து 3 பேரும் காரில் புதன்கிழமை இரவு திரும்பி, ஓசூர் நோக்கி வந்துள்ளனர். கார் வெங்கடாபுரம் – பாகலூர் சாலையில் உள்ள ஏரிக்கரையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக தடுப்பு வேலி இல்லாத ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற நபர்கள், உடனடியாக பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் கிரேன் மூலம் நீரில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர். அப்போது காருக்குள் உயிரிழந்த நிலையில் மகேஷ் மற்றும் லிண்டோ ஆகிய 2 பேரின் சடலங்கள் இருந்தன. யோகேஸ்வரனின் உடலை நேற்று காலை போலீசார் தேடி மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஏரிக்குள் கார் பாய்ந்து 3 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Osur ,Ravi ,Krishnagiri District, ,Osur Umasankar Nagar ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி...