×

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 7,994 வேட்பு மனுக்கள் ஏற்பு: தேர்தல் அதிகாரிகள் தகவல்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் ஆளும் பாஜ, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணியும் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவர் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் , சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது.

இதில் 288 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி கடந்த 30ம் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 7,994 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 921 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 4ம் தேதி ஆகும். அன்று ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

* 76 தொகுதிகளில் பாஜ, காங்கிரஸ் நேரடி மோதல்
மகாராஷ்டிரா தேர்தலில் 76 தொகுதிகளில் பா.ஜவும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக 76 தொகுதிகளில் மோதுகின்றன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ 148 தொகுதிகளிலும், காங்கிரஸ் 102 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில் 76 தொகுதிகளில் நேரடி போட்டி அமைந்துள்ளது. அதே போல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜவும் 30 இடங்களில் நேரடியாக மோதுகின்றன.

* டிஜிபியை நீக்க காங்கிரஸ் மனு
மகாராஷ்டிரா டிஜிபி ராஷ்மி சுக்லாவை நீக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

* முதல்முறையாக தனித்தனியாக தீபாவளி கொண்டாடிய சரத்பவார், அஜித்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாராமதி தொகுதியில் அஜித்பவாரை எதிர்த்து அவரது சகோதரர் மகன் யுகேந்திர பவாரை நிறுத்தியதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் முதன்முறையாக சரத்பவார் மற்றும் அஜித்பவார் ஆகியோர் இந்த ஆண்டு தனித்தனியாக தீபாவளியை கொண்டாடினர். சரத்பவார் வீட்டில் நடந்த விழாவில் குடும்பத்தினரும், அஜித்பவார் வீட்டில் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

 

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 7,994 வேட்பு மனுக்கள் ஏற்பு: தேர்தல் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra Assembly ,Mumbai ,Maharashtra Legislative Assembly ,BJP ,Shiv Sena ,Nationalist Congress ,Mahayudi Alliance ,Congress ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான...