×
Saravana Stores

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு மானாமதுரையில் ஆர்ப்பரித்து செல்லும் வைகை; விவசாயிகள் மகிழ்ச்சி

மானாமதுரை: தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மானாமதுரை பகுதியில் பாசனக் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மதுரை மாவட்டம், விரகனூர் மதகு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை வழியாக ஆர்ப்பரித்து சென்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வரை நீர்வரத்து ஏற்பட்டது. வைகை நீர் பல்வேறு கால்வாய்கள் வழியாக பாசன கண்மாய்களுக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்ததால் ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது. இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வைகையாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விரகனூர் மதகு அணைக்கு வந்தடைந்த மழைநீர் முழுவதும் அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள், மதகுகள் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த நீர் அன்றிரவு மானாமதுரை வந்தடைந்தது.

திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் ஆற்றின் இடது, வலதுபுற கால்வாய்கள் வழியாக சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் பாசன கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு மானாமதுரையில் ஆர்ப்பரித்து செல்லும் வைகை; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Manamadura ,Manamadurai ,Vaigai River ,Madurai ,Dindigul ,Theni ,
× RELATED குடிநீருக்காக பயன்படுத்தும் ஆற்றை...