சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ. 156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை உயர்கல்வித் துறை சார்பில் ரூ. 778 கோடி செலவிலான கல்விசார் கட்டிடங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டன.சென்னை தரமணி மையத் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள அச்சு தொழில்நுட்பப் பயிலகம், நெசவு தொழில்நுட்ப கல்லூரி, தோல் தொழில்நுட்பப் பயிலகம், வேதியியல் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் மாநில வணிகக் கல்வி பயிலகம் ஆகிய 5 சிறப்பு நிறுவனங்களில், ரூ. 49 கோடியே 52 லட்சம் செலவில் ஆய்வகக் கட்டிடங்கள், வகுப்பறைகள், முதல்வர் அறைகள், தேர்வு அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கல்விசார் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை, தரமணி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 18 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரம் செலவில்விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்விசார் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன், கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உயர்கல்வித்துறை சார்பில் ரூ. 156.05 கோடியில் கல்விசார் கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.