×

பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு மோசடிகள்: பொதுமக்கள், நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஒன்றிய அரசு வலியுறுத்தல்!!

டெல்லி: வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்படும் சட்டவிரோத மின்னணு பண பரிமாற்ற தளங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களுக்காக மியூல் அக்கவுண்ட் எனப்படும் நிழல் வங்கிக் கணக்குகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துவதாக ஒன்றிய உள்துறை எச்சரித்துள்ளது. இந்த மியூல் வங்கிக் கணக்குகள் என்பவை அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் இருந்து சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் மூலம் பெருந்தொகையை தனிநபரின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய உதவுபவை.

இதற்காக தனிநபர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை ரகசியமாக சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு சில செயலி நிறுவனங்கள் வழங்குவதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. எனவே சட்டவிரோத டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற உள்ளிட்ட குற்றங்களை புரிய உருவாக்கப்பட்ட மின்னணு தளங்கள் குறித்து குஜராத் மற்றும் ஆந்திர காவல்துறைகள் நாடு தழுவிய சோதனை நடத்தின. அதில் PeacePay, RTX Pay, PoccoPay, RPPay உள்ளிட்டவை சட்டவிரோத பணப்பரிமாற்ற தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற தளங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணத்தை பெற்று கொண்டு தங்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கொள்ள எந்த தனிநபருக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்க யாரும் முற்பட வேண்டாம் என்று இந்திய சைபர் குற்ற தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. தனிநபரின் கணக்குகளில் சட்டவிரோதமாக யாரேனும் பெருந்தொகையை டெபாசிட் செய்தால் கணக்கு வைத்திருப்பவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு மோசடிகள்: பொதுமக்கள், நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஒன்றிய அரசு வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : EU Government ,Delhi ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...