நத்தம் : நத்தம் அருகே திருமணிமுத்தாறின் குறுக்கே பாலம் இல்லாததால், பள்ளி மாணவர்கள் உள்ளிட் ட அனைவரும் தண்ணீரில் இறங்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24, 25ம தேதி ஆகிய இரு தினங்கள் கனமழை பெய்தது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகபட்ச அளவாக 66.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக நத்தம் அருகே முளையூரில் திருமணிமுத்தாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. முளையூருக்கு கிழக்கே திருமணிமுத்தாற்றின் கரைக்கு அப்பால் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் விளை பொருட்களை நத்தம் கொண்டு செல்வதற்கும், மாணவ, மாணவிகள் முளையூரில் உள்ள அரசு பள்ளிக்கு வந்து செல்வதற்கும், முதியோர், உடல் நலன் பாதிப்பிற்கு உள்ளானோர் மருத்துவமனை செல்வதற்கும் இந்த ஆற்றைக் கடக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இப்பகுதியில் மழை முடிவுக்கு வந்து மூன்று நாட்கள் ஆன நிலையிலும், ஆற்றில் நீர் வரத்து குறையவில்லை.
அதில் தற்போது முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும், ஆற்றில் தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே நத்தம் அருகே திருமணிமுத்தாறை கடந்து செல்ல மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நத்தம் அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கிலியன் கொடை கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மணிமுத்தாறைக் கடந்து தான் தங்கள் வீடுகளுக்குச்செல்ல வேண்டும்.
மருத்துவமனை மற்றும் பள்ளி உட்பட அனைத்து தேவைகளுக்கும் ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், ஆற்றைக் கடந்து ஒத்தக்கடை கிராமத்திற்கு வர வேண்டும். இதற்கிடையே, மழைக்காலங்களில் ஆற்றில் சுமார் நான்கு அடி உயரம் வரை தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
மழைக் காலங்களில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தடைபடுகிறது. கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்றால், உயிரை பணயம் வைத்து, கயிறு கட்டி ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, ஆற்றைக் கடந்து செல்ல வசதியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என, தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை ஏதுமில்லை.
தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை செல்ல வசதியில்லை.
எனவே ஆற்றை கடந்து செல்ல வசதியாக விரைந்து மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
The post நத்தம் அருகே தொடரும் அவலம் திருமணிமுத்தாறை கடக்க மேம்பாலம் தேவை : கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.