×
Saravana Stores

குண்டூசி முதல் இயந்திர தளவாடங்கள் வரை கிடைக்கும் 2 நூற்றாண்டுகளை கடந்த வேலூர் சண்டே மார்க்கெட்

வேலூர்: 250 ஆண்டுகளை நெருங்கும் வேலூர் சண்டே மார்க்கெட் பாரம்பரிய பெருமைமிக்கது மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தாங்கும் அச்சாணியாக விளங்கும் சந்தையாகவும் விளங்குகிறது. அனைத்து விதமான, மிகவும் பழமைவாய்ந்த அரிய பொருட்கள் குண்டூசி முதல் இயந்திர தளவாடங்கள் வரை குறைந்த விலையில் வாங்க வேண்டுமா? வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் சண்டே மார்க்கெட் போங்க என்று பரவலாக கூறுவது வழக்கம். அந்த வகையில் வேலூர் மட்டுமின்றி திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர் மாவட்டங்களில் இருந்தும் தங்களுக்கு தேவையான தளவாடங்கள் கிடைக்கிறதா என பார்ப்பதற்காக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க சண்டே மார்க்கெட்டுக்கு பெரிய பாரம்பரியம் உள்ளது.

சென்னை பெருநகரில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், 123 ஆண்டுகளுக்கு முன்பு, 1900ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி சென்னை மாநகர தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜார்ஜ்மூர் 40 ஆயிரம் சதுர அடியில் மூர் மார்க்கெட் வளாகத்தை திறந்து வைத்தார். இங்கு அனைத்து பழைய பொருட்களையும் கொடுத்து, நமக்கு தேவைப்படும் பழைய பொருட்களை வாங்கும் வசதியும் இருந்தது. அப்போது சென்னைவாசிகளால் குஜிலி பஜார் என்று அழைக்கப்பட்டது. இந்த மூர் மார்க்கெட் கடந்த 1985ம் ஆண்டு நடந்த பெரும் தீ விபத்தில் எரிந்து நாசமானது. அந்த இடத்தில்தான் தற்போது சென்னை புறநகர் ரயில் நிலையம் இயங்கி வருகிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே பழைய பாரம்பரிய பொருட்களை விற்கும் பஜார் வேலூரில் தொடங்கி நடந்து வந்தது என்றால் நம்பத்தான் வேண்டும். வேலூர் சண்டே மார்க்கெட் அதாவது வேலூர் ஞாயிறு சந்தை என்று அழைக்கப்படும் இதன் வரலாறு என்பது 240 ஆண்டுகளை கடந்தது. வேலூர் சண்டே மார்க்கெட் வரலாறு என்பது மைசூர் போர்களில் இருந்து தொடங்குகிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும், மைசூர் ஐதர்அலிக்கும், பின்னர் அவரது மகன் திப்புசுல்தானுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே 4 மைசூர் போர்கள் நடந்தது. இப்போர்களில் ஈடுபட்டு பிரிட்டிஷாரிடம் பிடிபட்ட மைசூர் ராஜ்யத்தின் சிப்பாய்கள், சரணடைந்த சிப்பாய்களின் குடும்பங்களில் பிரிட்டிஷ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வேலூர் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

அவ்வாறு குடியமர்த்தப்பட்ட வீரர்களின் குடும்பங்கள், மைசூர் படையில் இருந்தபோது, நடந்த போர்களில் சூறையாடிய பொருட்களை தங்கள் வாழ்வாதாரத்துக்காக விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்காக அவர்கள் நகரின் பிரதான பகுதியான வேலூர் லாங்கு பஜார் பகுதியில் கடைவிரிக்க ஆரம்பித்தனர். அப்போது, தங்களிடம் இருந்த கலைநயம்மிக்க ஆடைகள், பீங்கான் பொருட்கள், உலோக பொருட்கள் என பலவற்றை விற்றனர். இதற்கு அப்போதைய நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி அவர்கள் தங்களிடம் இருந்த பழைய பொருட்களையும், புத்தகங்கள், பழங்கால மரச்சாமான்கள், பழுதடைந்த ஆயுத தளவாடங்கள், இயந்திர தளவாடங்கள் என பலவற்றையும் இவர்களிடம் விற்றனர். அதை குறைந்த விலைக்கு வாங்கி கொஞ்சம் லாபம் வைத்து அப்பொருட்களையும் சண்டே மார்க்கெட்டில் கடை வைத்திருந்த மைசூர் சிப்பாய் குடும்பங்கள் விற்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கடைபிடித்ததால் அன்றைய தினம்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களும், சிப்பாய்களும், மற்ற பொதுமக்களும் அதிகளவில் வெளியில் நடமாடுவர். அதற்கு வசதியாகவே ஞாயிற்றுக்கிழமையில் இந்த சந்தையை கூட்ட வேண்டிய வழக்கம் வந்ததாக தெரிகிறது. இப்படி உருவான வேலூர் சண்டே மார்க்கெட் இன்றைய சூழலுக்கு ஏற்ப தனது மடியில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் தாங்கி நிற்கிறது. தற்போதைய சண்டே மார்க்கெட்டில் பழங்கால நாணயங்கள், கடிகாரங்கள், மரச்சாமான்கள், கிராம போன்கள், பிரிட்டிஷ் கால சைக்கிள்கள், மெடல்கள், பதக்கங்கள், பழங்கால போர்தளவாடங்கள், ரேடியோக்கள், கேசட் பிளேயர்கள் தொடங்கி, தற்போது கிடைக்கவே வாய்ப்பில்லாத பயன்தரும் பொக்கிஷங்களாக கருதப்படும் புத்தகங்கள், கணினிகள், வீட்டு உபயோக எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனங்கள், துணிமணிகள், பொம்மைகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இன்றைய தினம் 200 முதல் 250 குடும்பங்கள் வரை இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் அப்போதைய மைசூர் சாம்ராஜ்யத்துடன் தொடர்புடையவர்களாக இல்லை. காரணம், இன்று அவர்களுக்கு சம்பந்தமில்லாதவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் லாங்கு பஜார், அண்ணா பஜார் சாலைகளில் மட்டுமே இருந்த சண்டே மார்க்கெட் கடைகள் இன்று கமிசரி பஜார், பில்டர்பெட் சாலை ஆசிரியர் இல்லம் வரை விரிவடைந்துள்ளது. சந்தை நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே இங்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் அதற்கு மேலும் அன்றைய சூழலுக்கு ஏற்ப விற்பனை நடைபெறும் என்று கூறுகின்றனர் சண்டே மார்க்கெட் வியாபாரிகள். இத்தகைய பாரம்பரியமிக்க வேலூர் சண்டே மார்க்கெட், நாட்டிலேயே பழமையான மார்க்கெட் என்ற பெருமைக்குரியது என்பது வேலூர் நகருக்கும் பெருமைதானே.

The post குண்டூசி முதல் இயந்திர தளவாடங்கள் வரை கிடைக்கும் 2 நூற்றாண்டுகளை கடந்த வேலூர் சண்டே மார்க்கெட் appeared first on Dinakaran.

Tags : Kunduzi ,Vellore Sunday Market ,Vellore ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...