சென்னை: குரோம்பேட்டை ஆர்.பி.சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கும், சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அருகே என்.எஸ்.என் பள்ளி அதே போல் சிட்லப்பாக்கத்தில் உள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில் விடுக்கப்பட்டது.
இத்தகைய வெடிகுண்டு மிரட்டல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பப்பட்டது. இதனால் தாம்பரம் மாநகர காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களை அனுப்பி அங்கு சோதனை செய்து வருகின்றனர். குரோம்பேட்டை ஆர்.கே.சாலையில் உள்ள என்.எஸ்.என் பள்ளியில் முதலில் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த பள்ளியின் வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் பகுதியில் வெடிக்கும் என இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த வெடிகுண்டு மிரட்டலில் 55 ஆயிரம் டாலர் குறிப்பிட்ட இமெயில் ஐடிக்கு தொடர்பு கொண்டு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் உடனடியாக வெடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மைதான பகுதியை சுற்றி சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் மாணவர்களின் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளில் சோதனை செய்தனர். இதை தொடர்ந்து , சிட்லப்பாக்கம் அருகில் உள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தற்போது வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். அங்குள்ள மழலையர் பள்ளி மாணவர்களை வெளியேற்றி திறந்தவெளியில் சோதனை செய்தபின் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனை அடுத்து வகுப்பறைகள் மற்றும் அலுவலகஅறை, முதல்வர் அறை மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவியை கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் தாம்பரம் எம்.சி.சி பள்ளியிலும், வேளச்சேரியிலுள்ள மற்றொரு தனியார் பள்ளியிலும் இதே போல் வெடிகுண்டு தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வெடிகுண்டு மிரட்டலால் புறநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சென்னையில் இருவேறு இடங்களில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.