புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களுக்கு கடந்த 2 வாரங்களாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதுவரை சுமார் 275 மிரட்டல்கள் வந்துள்ள நிலையில் அனைத்து மிரட்டல்களும் புரளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலமாக வெடிகுண்டு புரளி கிளப்பப்படுகிறது. இதனால், ஒன்றிய அரசு சமூக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், ‘‘இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் நோக்கத்துடன், தங்கள் தளத்தில் எந்தவொரு பயனரும் செய்ததாக கருதப்படும் குற்றங்கள் குறித்து சமூக ஊடக நிறுவனங்கள் கட்டாயமாக புகாரளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சம்மந்தப்பட்ட பயனர் குறித்த தகவல்களை 72 மணி நேரத்திற்குள் புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதே போல, தவறான தகவல் பரவுவதை தடுக்க அதிகபட்சம் 72 மணி நேரத்திற்குள் அதன் அணுகலை முடக்கவோ, அழிக்கவோ வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்றும் 33 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன்மூலம் கடந்த 13 நாளில் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு குண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
The post சமூக ஊடக நிறுவனங்கள் போலி வெடிகுண்டு மிரட்டல் பதிவுகளை அழிக்க வேண்டும்: ஒன்றிய அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.