×

பண மோசடி செய்த பெண் தலைமறைவு: இருளர் பெண்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு இருளர் காலனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருத்தணி டிஎஸ்பி கந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அம் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் மூலம் எங்கள் கிராம மக்கள் கடன் பெற்று தவணை முறையில் பணம் செலுத்தி வருகிறோம். கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் நிதி நிறுவனத்தில் 9 பெண்கள் பெற்ற கடனை வாங்கிக்கொண்டார். மேலும், மாதா மாதம் தவணை தொகையை நிதி நிறுவனத்தில் செலுத்தி கொள்வதாக கூறிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கீதா ஊரைவிட்டு தலைமறைகிவிட்டார். 3 மாதங்களாகியும் வீடு வந்து சேரவில்லை. தவணை தொகையையும் செலுத்தவில்லை. பணம் கொடுத்த நிதி நிறுவன பணியாளர்கள் வாங்கிய கடனை கட்ட சொல்லி எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். இரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை ஏமாற்றி எங்கள் பணத்தை வாங்கி தலைமறைவாகியுள்ள கீதாவை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு நிதி நிறுவனத்தில் ஒப்படைக்கவும். அதுவரை நிதி நிறுவன ஊழியர்கள் எங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

The post பண மோசடி செய்த பெண் தலைமறைவு: இருளர் பெண்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Irular ,DSP ,Thiruthani ,Thiruvalangadu Union ,Thazhavedu Irular Colony ,Kandan ,
× RELATED இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு