×

பொதுப்பணித்துறையின் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: அமைச்சர் அவர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்த அரசு கூடுதல் தலைமை செயலாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களை வரவேற்று ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்

​கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், பொதுப்பணித்துறை அறிவிப்புகள், இதர துறையின் அறிவிப்பு பணிகள் மற்றும் இதர பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.

​நடைபெற்று வரும் பணிகள் தரத்துடன் குறித்த காலகெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலுவையிலுள்ள பணிகள் விரைவில் துவங்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

​முக்கிய அறிவிப்பு பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்க கட்டட வரைபடங்கள் உடனடியாக தயாரித்து அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், திட்டம் மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அனைத்து பணிகளுக்கும் உரிய கட்டட வடிவமைப்பு (Design) விவரங்கள் குறித்த காலத்தில் பணித்தளத்திற்கு வழங்க வேண்டும்.

​கண்காணிப்பு பொறியாளர்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் இதர முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகள் குறித்த விவரங்கள் பதிவு செய்திட வேண்டும்.

​அரசு மருத்துவமனை மற்றும் பொது கட்டடங்களில் பெரும்பாலான மின் தூக்கிகள் முறையான பராமரிப்பில் இல்லை என புகார்கள் எழுவதால், முறையான பராமரிப்புடன் மின் தூக்கிகள் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

​தற்போது, மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைகளில் மின் தூக்கி வசதி இல்லாத கட்டடங்களுக்கு உடனடியாக புதியதாக மின் தூக்கி வசதி அமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

​தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்கள் அனைத்து கட்டடப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்டடப் பணியின் போது பணி தளத்தில் ஆய்வகம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் எனவும், கட்டுமான பொருட்களின் தரச்சோதனை சான்றிதழ்கள், பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், அனைத்து பணிகள் முடித்து ஒப்படைக்க தரக்கட்டுப்பாட்டு கோட்ட அனுமதி பெறுதல் அவசியம் என தெரிவித்தார்.

​முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் அறிவிக்கப்பட்ட பெரிய திட்டப் பணிகளுக்கு, நிர்வாக ஒப்புதல் பெற கருத்துரு சமர்ப்பிக்கும் போது, திட்ட உருவாக்க நிதியை பயன்படுத்தி மண் பரிசோதனை மற்றும் இதர பணிதள ஆய்வுகள் மேற்கொண்டு மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

​முத்திரைத் திட்டப் பணிகள் மற்றும் இதர பெருந்திட்டப் பணிகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது பணிகளை குறித்த காலகெடுவிற்குள் முடித்திடும் வகையில், விரிவான காலதிட்ட அட்டவணை (Time Schedule + Milestone) ஒப்பந்ததாரரிடம் பெற்று இணைக்க வேண்டும்.

​மேலும், மதிப்பீடு தயாரிக்கும் போது, மண் பரிசோதனை அடிப்படையில் உரிய அடித்தளம் வடிவமைத்தல், கட்டடத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த அனைத்து விவரங்கள் பயன்பாட்டுத் துறையிடமிருந்து பெறுதல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நடைமுறையை முறையாக பின்பற்றுவதன் மூலம் கூடுதல் நிதிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறுவதை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.

​* கட்டடப் பணிகள் துவங்கப்படுவதற்கு முன், சுற்றுச் சூழல் அனுமதி, DTCP உள்ளிட்ட தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெற வேண்டும்.

​கட்டடங்களில் நீர்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான நீர்புகா பூச்சு (waterproof treatment) நடைமுறைகளை அவசியம் பயன்படுத்தவும்,எம்-சான்ட் சுவர் பூச்சு பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவை (போஸ்ராக் நிறுவனத்தின் செபக்ஸ் 113 கலவை போன்றவை) பயன்படுத்தவும், கட்டட பராமரிப்பு பணிகளின் போது தற்போது சந்தையில் நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

​மின் பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து மின் கசிவு ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாத்திடவும், பொது கட்டடங்களில் மின் சிக்கன நடவடிக்கையாக சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

​பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களால் கோயம்புத்தூர் மண்டலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். அவற்றில் குறிப்பாக,

​ரூ.245 கோடி மதிப்பில் கோயம்புத்தூர் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டடம், ​ரூ.114.16 கோடி மதிப்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடம், ​கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.11.23 கோடி மதிப்பில் நீதிமன்றக் கட்டடம் மற்றும் ரூ.14.59 கோடி மதிப்பில் பொள்ளாச்சி நீதிமன்றக் கட்டடம், ரூ.59.43 கோடி மதிப்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம்,

​ரூ.101.19 கோடி மதிப்பில் நாமக்கல் சட்டக் கல்லூரி கட்டடம் மற்றும் ரூ.101.55 கோடி மதிப்பில் சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டடம், ​திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.27.00 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம், ரூ.34 கோடி மதிப்பில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டடம்,

​ரூ.11.50 கோடி மதிப்பில் கோயம்புத்தூர் வணிக வரித்துறை கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.180.94 கோடி மதிப்பில் சேலம் மாவட்டம், தலைவாசலில் விலங்கு அறிவியல் மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கட்டடங்கள்,

​கேரள மாநிலம் வைக்கம் தந்தை பெரியார் நினைவக கட்டட சீரமைப்பு பணிகள் மற்றும் இதர மணிமண்டபங்கள் மற்றும் நினைவக கட்டடங்கள்,

​உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்தல் ஆகிய பணிகள் குறித்து அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

​மேலும், பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திட அறிவுரைகள் வழங்கினார். ​கண்டறியப்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு சாதனங்கள் உரிய அளவில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.

​பள்ளி வளாகம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத முற்றிலும் பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ​தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை, வடிகால்களில் சென்றடையும் வண்ணம் பம்ப் செட் மூலம் இறைத்து அவ்வப்போது அகற்ற வேண்டும்.

​இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் K.P. சத்தியமூர்த்தி, தலைமைக் கட்டடக் கலைஞர் இளவெண்மாள், கோயம்புத்தூர் மண்டல தலைமைப் பொறியாளர் R. ரங்கநாதன், சிறப்பு பணி அலுவலர் இரா. விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுப்பணித்துறையின் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Public Works Department ,Chennai ,Tamil Nadu ,chief minister ,AV ,Velu ,
× RELATED பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை...