×

செங்குன்றம் காவல் மாவட்டம், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

புழல்: செங்குன்றம் காவல் மாவட்ட காவல்துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா செங்குன்றம் உருவாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2025 ஆங்கில புத்தாண்டு விபத்தில்லா ஆண்டாகவும், விபத்தில்லா செங்குன்றம் உருவாக்குவதற்காகவும் செங்குன்றம் காவல் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில், பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டு சாலை, எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

புத்தாண்டை பொதுமக்கள், காவலர்கள், சமூக ஆர்வலர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அன்பு, செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், சரவணன், மனோகரன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், வழக்கறிஞர்கள் எம்.தேவராஜ், கந்தவேல், சரவணன் உள்ளிட்ட காவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதனையடுத்து சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையில் செல்லும்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், அதிவேக பயணம் நொடியில் மரணம், அதிக பாரம் ஏற்றி வாகனம் ஓட்டாதீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர், உயிரை காக்க தலைக்கவசம் அணிவீர், சரக்கு வாகனம் மீது ஆட்களை ஏற்றாதீர் உள்ளிட்டவை குறித்தும், கஞ்சா, போதை மாத்திரைகள், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால், பொதுமக்கள் காவல்துறை கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post செங்குன்றம் காவல் மாவட்டம், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chengunram Police District ,Traffic Police ,Puzhal ,Chengunram ,Traffic Police… ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில்...