×

வேட்டைக்காரப்பாளையம் கிராமத்தில் நெற்குன்றம் ஊராட்சி சார்பில் 50,000 மரக்கன்று நடும் திட்டம்: திருவள்ளூர் எம்பி தொடங்கி வைத்தார்

புழல்: வேட்டைக்காரப்பாளையம் கிராமத்தில் நெற்குன்றம் ஊராட்சி சார்பில், 50,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தொடங்கி வைத்தார். சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரப்பாளையம் கிராமத்தில், மேய்க்கால் அரசு புறம்போக்கு இடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, 15 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்டார். பின்னர், அப்பகுதியில் அசோக மரம், புன்னை மரம், நாவல், பலா, மா உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து 50,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் மரம் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விழாவில், கலந்துகொண்ட எம்பியிடம், தங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்கவும், வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, பெல்ட் ஏரியா பகுதிகளில் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும், மேய்க்கால் மற்றும் அரசு இடங்களில் மரங்கள் வளர்க்கவும், கால்நடை தீவனங்கள் வளர்க்கவும் அனைத்து ஊராட்சிகளிலும் முன் மாதிரியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும், தமிழக அரசு அரசாணை மூலம் புதிய நகராட்சி பேரூராட்சிகளை உருவாக்கியுள்ளது. சில இடங்களில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், வளர்ச்சிக்கு அவசியமானதாக அமைந்துள்ளது என்றும் எம்பி தெரிவித்தார். இந்நிகழ்வில் சோழவரம் ஒன்றியக்குழு தலைவர் வே.கருணாகரன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வேட்டைக்காரப்பாளையம் கிராமத்தில் நெற்குன்றம் ஊராட்சி சார்பில் 50,000 மரக்கன்று நடும் திட்டம்: திருவள்ளூர் எம்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur MP ,Nelkundram Panchayat ,Vettaikarapalayam ,Tiruvallur ,Sasikanth Senthil ,Vettaikarapalayam village ,Cholavaram ,Union ,Panchayat President ,Meyikkal Government ,Dinakaran ,
× RELATED புறநகர் ரயில்கள் ரத்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம்