- போந்தவாக்கம் அரசு பள்ளி
- Uthukkottai
- பொந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி
- பூண்டி ஒன்றியம்
- அரசு பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி
ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர் கோரிக்ைக வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மொத்தம் 15 வகுப்பறைகளை கொண்டுள்ளது. இப்பள்ளியைச் சுற்றி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த சுற்றுச்சுவர் முழுவதும் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த வருடம் பெய்த கனமழையால் சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரின் பின்பகுதி இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுற்றுச்சுவரின் பகுதிகளும் நன்கு சேதமடைந்துள்ளதால், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்பிருக்கிறது. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: போந்தவாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள காம்பவுண்டு சுவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழையின் போது சேதமடைந்து உடைந்து விட்டது. இப்பள்ளிக்கு அருகில் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் பெய்த கன மழையால், ஏரி நீர் இடிந்து விழுந்த பள்ளியின் பின்புற சுற்றுச்சுவரின் வழியாக பள்ளிக்குள் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பள்ளியின் உள்ளே எளிதில் புகுந்து விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, இப்பள்ளியைச் சுற்றிலும் விரைவில் காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post போந்தவாக்கம் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்: பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.