ஆவடி: அலுவலகத்துக்கு பைக்கில் சென்றபோது வேகத்தடையில் நிலைதடுமாறி நகைக்கடை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி கனகசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38), போரூரில் உள்ள மணப்புரம் கோல்டு ஹவுஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ரேஷ்மா (27) என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜ்குமார் போரூர் அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில், ஆவடி கிளை அலுவலகம் செல்வதற்காக பூந்தமல்லியில் இருந்து பைக்கில் ஆவடியை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீராம் நகர் அருகே சென்றபோது, புதிதாக கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலை தடுமாறி ராஜ்குமார் கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் சில தினங்களாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையால் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு கருப்பு-வெள்ளை நிற பெயின்ட் அடிப்பதில்லை. வேகத்தடை உள்ளது என அறிவிப்பு பலகையும் வைப்பதில்லை. தற்போது, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் பெயின்ட் அடிப்பதும், அறிவிப்பு பலகை வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
The post அலுவலகத்துக்கு பைக்கில் சென்றபோது வேகத்தடையில் நிலைதடுமாறி நகைக்கடை மேலாளர் பலி appeared first on Dinakaran.