திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழ இருந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நேற்று திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் சந்திரகாந்த் (33) என்பவர் திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடையில் நேற்று பணியில் இருந்தார். அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் நோக்கி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திருவள்ளூரில் ஒரு நிமிடம் நின்று மீண்டும் மைசூர் நோக்கி புறப்பட்டது.
அப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளை உடை அணிந்த ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். இதில் அவர் திடீரென நிலைதடுமாறி ஓடும் ரயிலிலிருந்து கீழே விழும் நிலையில் இருந்தார். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் சந்திரகாந்த், அந்த நபர் கீழே விழாமல் இருக்க துரிதமாக செயல்பட்டு ரயில் பெட்டிக்குள் தள்ளி அவரது உயிரை காப்பாற்றினார். இதைக் கண்ட சக ரயில் பயணிகள் துரிதமாக செயல்பட்டு கீழே விழும் நிலையில் இருந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் சந்திரகாந்த்தை வெகுவாக பாராட்டினர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.
The post ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் appeared first on Dinakaran.