×
Saravana Stores

பைக்கில் மோதுவதுபோல் சென்றதால் ஆத்திரம்; பஸ் டிரைவர் மடியில் ஏறி அமர்ந்து வாலிபர் பயணம்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் காந்தி நகர் பகுதியில் கோவை அரசு பஸ் டிரைவர் மடியில் அமர்ந்து தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் ரகுராம். இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ்சை இயக்கி வந்தார். திருப்பூர் அவிநாசி ரோடு பெரியார் காலனிக்கு பஸ் வந்தபோது பைக்கில் வந்த நபர் மீது மோதுவதுபோல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பைக்கில் வந்த நபர் ஆத்திரமடைந்தார். அவர் பஸ்சை துரத்தி சென்று காந்தி நகர் சிக்னலில் நின்றபோது வழிமறித்தார்.

தொடர்ந்து அவர் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் மது போதையில் இருந்தார். அவர் டிரைவரின் இருக்கை அருகே சென்றார். திடீரென அவர் டிரைவரின் மடியில் அமர்ந்து பஸ்சை எடுக்க விடாமல் தகராறு செய்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காந்திநகர் சிக்னலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து பஸ்சைவிட்டு வெளியேற்றினர். தொடர்ந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

போதையில் வாலிபர் ரகளை செய்தது தொடர்பாக பஸ் டிரைவர் ரகுராம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த போதை நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் சோளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் (43) என்பதும், பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுத்தனர். டிரைவரின் மடியில் அமர்ந்து பிரதீப் தகராறு செய்ததை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post பைக்கில் மோதுவதுபோல் சென்றதால் ஆத்திரம்; பஸ் டிரைவர் மடியில் ஏறி அமர்ந்து வாலிபர் பயணம்: திருப்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Coimbatore government ,Gandhi Nagar ,Coimbatore Government Transport Corporation ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...