புழல், அக். 24: செங்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தராமல் தெருவில் வீசுவதாலும், குப்பை தொட்டியில் அப்படியே குப்பைகளை போடுவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு கையுறை வேண்டுமெனவும், மூன்று சக்கர வாகனங்கள் இல்லாமல் குப்பைகளை எடுக்க முடியாமலும், குப்பைகள் உள்ள இடத்தில் புழுக்கள் நெளிவதால் தங்களின் உடல்நிலை பாதிப்புக்கு உண்டாகும் என்ற நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் பணிபுரியும் வார்டுகளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில், செங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால், சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பணிக்கு செல்லாமல் அலுவலகத்தில் வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் யமுனா, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் சமாதானம் பேச முற்பட்டபோது, எங்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.