சென்னை: தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை டியுசிஎஸ் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடைகள் ஒதுக்கப்பட்டு நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், டெண்டரை நியாயமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பாணையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சில நிபந்தனைகளை நீக்கி, பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றி இருப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான டெண்டரை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) நடத்த அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் சார்பில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சம், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்த தொகைக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்பட்டு, நாளை முதல் சென்னை, தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
The post தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை டியுசிஎஸ் வெளியிட்டது: நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்க திட்டம் appeared first on Dinakaran.