×
Saravana Stores

செங்கல்பட்டு அருகே வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்: பாலாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பாலாற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் தொலைவும் ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 222 கிலோ மீட்டர் தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வேலூர், வாணியம்பாடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன் பெறுகின்றன. விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.

பறந்து விரிந்து காட்சியளிக்கும் பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது தான் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகள் கோரிக்கை. மழை காலத்தில் இருகரைகளையும் தொட்டபடி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே ஆறு வறண்டு காட்சியளிக்கும் இந்த பகுதியில் தடுப்பணை இல்லாததால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் கல்பாக்கம் அருகே வயலூரில் வீணாக கடலில் கலக்கிறது. தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமித்து வைக்க தவறுவதால் பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களிலேயே கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற அரசு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

The post செங்கல்பட்டு அருகே வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்: பாலாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Bala ,Kanchipuram ,Palaru ,Nandi Hills of ,Karnataka ,Tamil Nadu ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED வளர்ப்பு நாய்குட்டிகள் இறந்ததால்...