×
Saravana Stores

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம்

*டிசம்பர் மாதத்தில் திறக்க திட்டம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகை பார்த்து ரசிக்கும் வகையில், கடல் சீற்றத்தினால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்ட கண்ணாடி இழை தரைத்தள பாலமாக இந்த பாலம் அமைய உள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.37 கோடியில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைகிறது. அதிக பட்ச கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இப்பாலம் அமையும். இதற்காக இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மற்றும் 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடிப் பகுதியும், இரண்டு பக்கங்களில் கல் மண்டபமும் அமைக்கப்படுகிறது. இப்பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் புதுவையில் நடந்தது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பாறையிலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமையப்பெற்றுள்ள பாறையிலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து பாலத்தின் இரு பக்கத்தையும் இணைக்கும் ஆர்ச் அமைப்பு பொருத்துவதற்கான அடித்தள பணியான இரும்பு தூண்கள் பொருத்தும் பணிகள் நடந்தது. இதனை தொடர்ந்து புதுவையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகியன கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் நெட்வொர்க் ஆர்ச் முழுமையாக புதுவையில் வைத்து பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் பீம்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது கன்னியாகுமரியில் பீம்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பாலப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக இரண்டு பகுதிகளிலும் ஆர்ச் பீம்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணிகளை முடித்து டிசம்பர் மாதம் பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil ,Thiruvalluvar ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!!