×

மொபட் மீது டிராக்டர் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி அறுவை சிகிச்சை மூலம் எடுத்த ஆண் குழந்தையும் இறந்தது ஸ்கேன் செய்துவிட்டு திரும்பியபோது சோகம்

செய்யாறு, அக்.23: செய்யாறு அருகே மொபட் மீது டிராக்டர் மோதி நிறை மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட குழந்தையும் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாழ்குடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சடையாண்டி சந்தோஷ்(37). இவரது மனைவி அங்காளஈஸ்வரி(34). முதுகலை பட்டதாரிகளான தம்பதியினர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு பர்வேஷ் விஷ்ணு(4) என்ற மகன் உள்ளார். அங்காளஈஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், வேலைக்கு செல்வதை தம்பதியினர் நிறுத்திவிட்டனர். இதனால் சடையாண்டி சந்தோஷ் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான அங்காள ஈஸ்வரி நேற்று முன்தினம் கணவர் சடையாண்டி சந்தோசுடன் ஸ்கேன் செய்ய மொபட்டில் செய்யாறில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு மீண்டும் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். தவசி -நாவல் சாலையில் உள்ள ஏரிக்கரை கோழிப்பண்ணை அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர், மொபட் மீது அதிவேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த அங்காளஈஸ்வரி மயங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அங்காள ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் உறவினர்கள் வேண்டுகோளின்படி அங்காளஈஸ்வரியின் வயிற்றில் இருந்த குழந்தையை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். ஆனால் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையும் இறந்து கிடந்தது.
சடையாண்டி சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சடையாண்டி சந்தோஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்யாறு அருகே மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சிக்கி கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மொபட் மீது டிராக்டர் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி அறுவை சிகிச்சை மூலம் எடுத்த ஆண் குழந்தையும் இறந்தது ஸ்கேன் செய்துவிட்டு திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Thiruvannamalai District ,
× RELATED செய்யாறு வட்டாரத்தில் பெஞ்சல் புயல்...