×

பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி பட்டப்பகலில் மர்ம நபர் கைவரிசை வழிகேட்பது போல் நடித்து

கலசபாக்கம், டிச. 28: பட்டப்பகலில் வழிகேட்பது போல் நடித்து பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி(55). இவர் நேற்று காலை பழங்கோயில் கிராமத்தில் உள்ள அக்கள் மகள் ஆனந்தி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் பழங்கோயிலுக்கு எப்படி செல்வது என்று வழிகேட்டார். இவருக்கு பதில் அளித்துகொண்டிருந்த சிறிதுநேரத்தில் அந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரி கழுத்து மற்றும் மூக்கில் குத்தி கழுத்தில் உள்ள தங்க ெசயினை பறிக்க முயன்றார்.

இதைதடுக்க முயன்ற சுந்தரியை மீண்டும் கத்தியால் குத்த முயன்றபோது அந்த பெண் அலறி கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார். உடனே காயமடைந்த சுந்தரியை பொதுமக்கள் மீட்டு கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடித்து சுந்தரி மாலையில் வீடு திரும்பினார். இதையடுத்து சுந்தரி கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் வழிகேட்பது போல் நடித்து பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி பட்டப்பகலில் மர்ம நபர் கைவரிசை வழிகேட்பது போல் நடித்து appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Sundari ,Kadaladi village ,Tiruvannamalai district ,
× RELATED பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு ஜன.1 முதல் அமல்