திருவள்ளூர்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘பிங்க்’ நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு தினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், அதைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புற்றுநோய் இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை முழுவதும் ‘பிங்க்’ நிறத்தில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. இந்த பிங்க் நிற விளக்குகள் ஒரு மாத காலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒளிர விடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் மருத்துவமனை முழுவதும் பிங்க் நிறத்தில் விளக்குகளை ஒளிரவிட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் பேருந்துகள், பைக், கார்களில் செல்லும் பொதுமக்கள் இரவு நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒளிரும் விளக்குகளை பார்த்து ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
The post தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘பிங்க்’ நிற விளக்குகளால் அலங்கரிப்பு appeared first on Dinakaran.