×
Saravana Stores

மப்பேடு கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு: ஆவணங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்

திருவள்ளூர்: மப்பேடு கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ஆதித்த கரிகால சோழனால் 967ம் ஆண்டு கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோயில் உள்ளது. ஆதித்ய கரிகால சோழனுக்குப் பிறகு அந்த கோயில் விஜயநகர பேரரசு காலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல்துறையின் தென் மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் உத்தரவின் பேரில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு துணை கண்காணிப்பாளர் இயேசு பாபு மற்றும் கல்வெட்டுப் பிரிவு உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து செப்பேடுகளை ஆய்வு செய்தனர்.

கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 3 செப்பேடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சித்தையா ஜெகதீசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் இணைந்து ஆய்வுக்காக அளித்தனர். செப்பேடுகளை பெற்ற தொல்லியல்துறை கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பின்னர் செப்பேடுகளில் அச்சு மை தடவி சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்துகளால் அச்சடிக்கப்பட்டிருந்த எழுத்துகளின் அச்சுகளை வெள்ளை தாள்கள் மூலமாக ஆவணமாக சேகரித்தனர். பின்னர் செப்பேடுகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து எழுத்து அச்சுக்களால், பேப்பர்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். ஆய்வின் முடிவில் முழுமையான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தெரிவிக்கும் என கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

The post மப்பேடு கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு: ஆவணங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Mappedu temple ,Tiruvallur ,Inscription Division ,the Archeology Department ,Singeeswarar ,Temple ,Adittha Karikala Chola ,Mappet, Tiruvallur district ,Aditya Karikala Chola ,Archeology ,Mapedu temple ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...