திருப்போரூர்: திருப்போரூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொறியியல் கலை, அறிவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் படித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தலையாரிபட்டி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் யோகேஷ் (19) என்பவர், பாலிடெக்னிக் முடித்து விட்டு நேரிடையாக பொறியியல் கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு சேர்ந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இக்கல்லூரியில் அவர் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், பொறியியல் படிப்பு மிகவும் கடினமாகவும், ஆங்கிலம் புரியாத வகையில் இருப்பதாகவும் சக மாணவர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தன்னால், தனது பெற்றோர் கடின வேலை செய்து படிக்க வைப்பதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பை தன்னால் பூர்த்தி செய்ய முடியாது என்று நினைப்பவதாகவும் மாணவர் யோகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால், கீழே விழுந்ததில் அவருடைய தலை, கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் விழுந்த சத்தம்கேட்டு அப்பகுதியில் பணியில் இருந்த பாதுகாவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுதி வார்டன் கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் திருப்போரூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆங்கில பாடம் புரியாததால் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி: திருப்போரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.