×
Saravana Stores

மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கு போலீசிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடிய பிரபல ரவுடி பஸ் மோதி பலி: மேலும், ஒரு குற்றவாளி கைது

கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்தபோது கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். மேலும் போலீஸ் துரத்தியபோது பிரபல ரவுடி பஸ் மோதி பலியான சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், காயிதே மில்லத் தெருவில் குடியிருந்து வந்தவர் முகமதுசதாம்உசேன்(38) பிரபல ரவுடி. இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்கெட்ச் வெங்கடேசன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். மேலும் ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதனை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமரத்து சுயம்பு விநாயகர் கோயில் விளையாட்டு திடலில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கஞ்சா மற்றும் மது அருந்ததி
கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். இதில் முகமதுசதாம்உசேன் மட்டும் மது போதையில் போலீசாரிடம் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் சிக்கிக்கொண்டார். மேலும் பிடிபட்ட முகமதுசதாம்உசேனை கூடுவாஞ்சேரி போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய காயரம்படு பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே நந்திவரம், பெரியார் நகர், புத்துக்கோயில் தெரு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பூமிநாதன்(24) கூடுவாஞ்சேரி ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மது அருந்திவிட்டு அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் வழிபறி செய்துள்ளார். இதில் அந்த வாலிபர் கூச்சலிடும் சத்தத்தை கேட்ட ரயில்வே போலீசார் பூமிநாதனை துரத்தி வந்துள்ளனர்.

அப்போது கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை கடந்து சென்டர் மீடியனில் உள்ள தடுப்பு சுவர் மீது எகிறி குதித்தபோது தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த வழித்தட எண் 500ஏ என்ற மாநகர பேருந்து மோதியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியான பூமிநாதன் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது 10க்கு மேற்பட்ட வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு சம்பவமும் ஒரே நாள் இரவில் நடந்ததால் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கு போலீசிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடிய பிரபல ரவுடி பஸ் மோதி பலி: மேலும், ஒரு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Madambakkam ,Guduvanchery ,Madambakkam panchayat ,Guduvancheri.… ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் அனுமதியின்றி...