×

எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன..? அதற்கான சிகிச்சைமுறைகள் என்ன..?தீர்வு என்ன.. என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது என்ன..? யாருக்கெல்லாம் ஏற்படலாம்..?

எலும்பிலுள்ள பொருள் திணிவு (bone mass) குறையும்போது அது தன் வலிமையை இழக்கிறது. இதையே எலும்பு வலிமை இழத்தல் (osteoporosis) நோய் என்கிறோம். இந்தப் பிரச்னை வந்துவிட்டால், சாதாரணமாக நடக்கும் போது, சிறிதாக தடுக்கி விழுந்தாலும் கூட எலும்பு முறிவு ஏற்படும். பொதுவாக வயதானவர்களுக்குதான் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், நமது உடலானது எலும்புகளைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இளமையில் இது வேகமாக நிகழ்கிறது. வயதாகும்போது, எலும்பானது வலிமையை இழக்கிறது.

யாருக்கெல்லாம் வரும் என்றால், ஆண், பெண் இருவருக்குமே வரலாம். ஆனால், ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படுகிறது. ஏனென்றால், ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடல் அமைப்பும் வெவ்வேறாக இருப்பதனால், எலும்புகளின் தன்மையும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு பெண்ணுக்கு இருப்பதாலும், எலும்பு வலிமை இழப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது. மாதவிடாய் சீக்கிரம் நின்றுவிடும் பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலத்தில் குறைந்த எடையுள்ள பெண்கள், கால்சியம் சத்துள்ள உணவைக் குறைவாக உண்ணுபவர்களுக்கு, ஸ்டீராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இத்தொல்லை வர வாய்ப்புகள் அதிகம். பெற்றோரில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் வரலாம்.

இதைத்தவிர, குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கவனிப்பது போல் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். சத்தான உணவுகளையும் அவ்வளவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதுவும் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அதிகம் ஏற்பட ஒரு காரணமாகிறது.

பெண்களுக்கு எந்த வயதில் ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம்..

பொதுவாக 45 வயதை பெண்கள் அடைந்துவிட்டாலே ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஆரம்பமாகும். ஏனென்றால் அந்த வயதில் தான் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையத் தொடங்கும். இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், ஆரம்பநிலையில் இந்தநோய் இருப்பதற்கான அறிகுறி எதுவுமே தெரியாது. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து, கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்போதோ அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காக மருத்துவரை அணுகும்போதோதான் எலும்பு மிகவும் பலவீனமாக இருப்பது தெரிய வரும். உதாரணமாக, சிலர் நடந்து கொண்டிருக்கும் போது ஏதாவது சின்னதாக தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும்.

சிலருக்கு கீழே விழாமலேயே எவ்வித அடியும் படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதும் உண்டு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். எலும்பு அடர்த்தி குறைவதால், முதுகுவலி ஏற்படும். முதுகு வளைந்து, உயரம் குறையும். பல செயல்பாடுகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். மற்றபடி பெரிய அறிகுறிகள் எதுவும் தெரியாது. அந்தளவுக்கு ஒரு சைலன்ட் நோய் இது. ஆனால், கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அதுவும் முன்பு ஏற்பட்ட பாதிப்புகளின் அளவை பொருத்து அவை குணப்படுத்தும் விதம் மாறும். ஆனால், மேற்கொண்டு பாதிப்புகள் ஏற்படாமல் முழுமையாக தடுக்க முடியும்.

எப்படி கண்டுபிடிப்பது

எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியும். இப்பொழுது டெக்ஸா ஸ்கேன் மூலம் இந்நோயை மிக எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அதற்காக பெரிய மெனகெடல்கள் தேவையில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சென்று 20 நிமிடத்தில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

சிகிச்சைகள்

சீக்கிரமே மாதவிடாய் நின்றுவிட்டாலோ, ஸ்டீராய்டு மருந்துகளை மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டாலோ, இந்தப் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் முன்பே டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. இதுதவிர, விட்டமின் டியின் அளவு முக்கியமானது. விட்டமின் டி உடலில் குறைந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த விட்டமின் டியை பெறுவதற்கு, தயிர், மோர், பால், மீன், முட்டை போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், காலை 7-9 மணிக்குள் இருக்கும் வெயிலில் சிறிது நேரம் சூர்ய நமஸ்காரம் போன்றவற்றை செய்யலாம். இது தவிர, மாத்திரைகள், ஊசி மூலமும் பெறலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் வகைகள்

ஆஸ்டியோபோரோசிஸில் இரண்டு வகைகள்தான். ஒன்று ப்ரைமரி ஆஸ்டியோபோரோசிஸ் மற்றொன்று செகன்ட்ரி ஆஸ்டியோபோரோசிஸ். ப்ரைமரி, வயது மற்றும் ஹார்மோன் சம்பந்தபட்டு வருவது. செகன்டரி, ஏதேனும் பிரச்னைக்காக ஸ்டீராய்ட் மருத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு வரும். அதுபோன்று புகைப்பிடிப்பதனாலும் ஆஸ்டியோபோரோசிஸ் வரலாம். அல்லது புற்று நோய்களினாலும், குறிப்பாக மல்டிபிள் மைலோமா போன்ற புற்றுநோய்களாலும் ஆஸ்டியோபோரோசிஸ் வரலாம்.

பாதுகாக்கும் வழிமுறைகள்

உடற்பயிற்சிகளினால் எலும்பை உறுதி அடையச் செய்ய முடியும். உதாரணமாக, வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துதல் மற்றும் ஆசனப்பயிற்சிகள். குறிப்பாக எடை தூக்கும் பயிற்சிகள் போன்றவை எலும்புகளுக்குப் பெரிதும் வலிமை கொடுக்கும்.தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சூரியஒளி உடலில் படுமாறு இருப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கிறது. மீன், முட்டைக் கரு, கல்லீரல், பால் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் கிடைக்கிறது. முடியாதவர்கள் வைட்டமின் டி 800 யூனிட் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்பை உறுதி செய்ய மிகவும் உதவும்.

நம் உடலுக்குத் தினமும் 1300 மி.கி. கால்சியம் தேவை. சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ராகி, பால், கீரை, கொய்யாப்பழம், மீன், இறால், நண்டு மற்றும் உலர் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.காபியைக் குறைக்கவும். டீ அருந்துவதனால் எலும்பு பாதிப்பு ஏற்படுவதில்லை. எடை குறைவாக இருந்தால், எலும்பு வலிமை இழக்கும். எடை அதிகமாக இருந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும். எனவே, உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.

வீட்டில் வழுவழுப்பான தரையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பாத்ரூம் உட்பட எல்லா இடங்களிலும் தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும்.
தரையில் தேவையற்ற விரிப்புகள் மற்றும் பொருட்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.படிக்கட்டுகள் மற்றும் குளியல் அறையில் கைப்பிடி அவசியம் பொறுத்த
வேண்டும்.இடுப்பு எலும்பைப் பாதுகாக்கும் உபகரணத்தை ( Hip protectors) பொருத்திக் கொள்வதால் எலும்பு முறிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

எலும்பு வலிமையிழத்தல் ஒரு தடுக்கக்கூடிய தொல்லையே. இதற்கென்று தனிப்பட்ட நோயின் அறிகுறிகள் இல்லாததினால், இறுதி மாதவிடாய் ஏற்படும் பருவத்திலிருந்தே சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சி மூலம் இத்தொல்லையை வராமலேயே தடுத்துக் கொள்ளலாம். மேலும், 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறையேனும் பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,
× RELATED நன்மை செய்யும் மூலிகை தேநீர்!