தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள 10க்கும் மேற்பட்ட யானைகள், அங்குள்ள ஏரியில் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் ஆலஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகளை, வனத்துறையினர் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையை கடந்து சென்ற இந்த யானைகள், நொகனூர் வனப்பகுதியில் ஏற்கனவே முகாமிட்டிருந்த காட்டு 5 யானைகளோடு சேர்ந்தன. தாவரகரை, மலசோனை, கண்டகானபபள்ளி, கெண்டகாணப்பள்ளி கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த இந்த யானைகள், நேற்று மலசோனை அருகே உள்ள பகுதியில் முகாமிட்டன.
அங்குள்ள ஏரியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. யானைகள் முள் பிளாட் பகுதியில் முகாமிட்டிருப்பதால், அதனை சுற்றியுள்ள மலசோனை, கண்ட காணப்பள்ளி, தாவரக்கரை, உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே இடத்தில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால், அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த குளியல் போட்ட 10 யானைகள்: கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.