புதுடெல்லி: பஞ்சாபில் கடந்த 2011ம் ஆண்டு டிஎஸ்பிஎல் நிறுவனம் 1980மெகாவாட் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த பணியானது சீன நிறுவனமான செப்கோவிற்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால கெடுவுக்கு பின்னரும் பணியை நிறைவு செய்யாததால் அபராதம் விதிக்கும் வாய்ப்புக்களை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது. தாமதத்தை தவிர்ப்பதற்காக நிறுவனம் உள்துறை அமைச்சகத்தால் விதிக்கப்பட்ட உச்சவரம்புக்கும் அதிகமாக சீன தொழிலாளர்களையும், நிபுணர்களையும் கொண்டுவருவதற்கு முயற்சித்தது. இந்த நிறுவனத்துக்காக 263 சீன தொழிலாளர்களுக்கு விசா பெற்றுத்தருவதற்காக அப்போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையில் எம்பி கார்த்தி சிதம்பரம், வேதாந்தா மற்றும் மும்பையை சேர்ந்த பெல் நிறுவனங்களின் துணை நிறுவனமான தளவாண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்தவரும் நெருங்கிய கூட்டாளியுமான எஸ் பாஸ்கரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களை சிபிஐ சுமத்தியுள்ளது.
The post விசா முறைகேடு வழக்கு கார்த்தி சிதம்பரம் எம்பிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.