×
Saravana Stores

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்றுத்தருவதாக பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்: கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

சேலம்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகையை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. அதன்படி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்றுவரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை முடித்த மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுபோன்று பள்ளியிலேயே ஆதார் வழங்கும் விதமாக, ஆதார் பதிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மாணவர்களின் பெற்றோரின் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மோசடியில் ஈடுபடுபவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அணுகி, கல்வித்துறையிலிருந்து ஊக்கத்தொகை பெற்றுத் தருவதாக கூறுகின்றனர்.

பின்னர் அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கியூஆர் கோடு அனுப்பி, அதனை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை கிடைக்கும் என போலியான செய்தி அனுப்பி ஏமாற்றி, பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுபோன்ற மோசடி கும்பலிடம் ரூ.1.28 லட்சத்திற்கும் மேல் ஏமாந்துள்ளதாக, 10 நபர்கள் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதேசமயம் பலர் தாங்கள் ஏமாந்தது குறித்து புகார் அளிக்காமல் இருந்து வருவதாக தெரிகிறது.

எனவே, இதுபோன்ற மோசடி கும்பலிடம் பெற்றோர்கள் மேலும் பணத்தை இழப்பதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டம் நடத்தும் போது, ஊக்கத்தொகை தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள் என்றும், போனில் தொடர்பு கொள்பவர்களிடம், வங்கி தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்றுத்தருவதாக பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்: கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Department of Education ,Tamil Nadu ,
× RELATED மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில்...