×
Saravana Stores

மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க தடுப்புச்சுவர்

*தொடர் கண்காணிப்பில் ரயில்வே ஊழியர்கள்

சேலம் : மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது பருவமழை பெய்வதால் தொடர் கண்காணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இப்பருவமழை காலத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் படி சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டங்களுக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்பேரில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க தொடர் கண்காணிப்பில் பொறியியல் பிரிவு கடைநிலை ஊழியர்களான கேங்மேன், கீமேன்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காலை, மதியம், மாலை என 3 முறை தண்டவாளத்தில் ரோந்து சென்று கண்காணிக்கின்றனர்.

இதனிடையே தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் எங்கெல்லாம் மலை மற்றும் குன்றுகளுக்கிடையே ரயில் பாதை செல்கிறதோ, அங்கெல்லாம் மழைநீர் தேங்காமல் இருக்க கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த மலை மற்றும் குன்றுகளுக்கிடையே செல்லும் தண்டவாள பகுதியில் இருபுறத்திலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. அதாவது, மலைக்குன்றுகளில் இருந்து தண்ணீர் வடிந்து வந்து தண்டவாளத்தில் தேங்கக்கூடாது என்பதற்காக இருபுறமும் சுமார் 10 அடி தூரத்தில் வடிகாலுடன் தடுப்பு சுவரை கட்டி வருகின்றனர்.

சேலம் கோட்டத்தை பொறுத்தளவில் சேலம் மேக்னசைட்-ஓமலூருக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் சங்ககிரி-காவேரி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் குன்றுகளுக்கிடையே இத்தகைய தடுப்பு சுவர்களை கட்டியுள்ளனர். இதன்மூலம் பருவமழை காலத்தில் தண்டவாளத்தை ஒட்டிய இடங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்படுகிறது. மேலும், குன்றுகளில் இருந்து சிறிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக ரயில் பாதையை ஒட்டிய இருபுறத்திலும் கம்பி வேலி போட்டு கட்டியுள்ளனர்.

சேலம் கருப்பூர் பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குன்றுகளுக்கிடையே ரயில் பாதை செல்கிறது. அந்த இடத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளநிலையில், தினமும் ரோந்து பணியிலும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற இடங்களிலும் பருவமழையால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க தடுப்புச்சுவர் appeared first on Dinakaran.

Tags : Salem ,North-East ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு