×

லெமூர் பீச்சில் கள்ளக்கடல் எச்சரிக்கை; கடைகளை சூறையாடிய ராட்சத அலை: சுற்றுலா பயணிகளுக்கு தடை


ஈத்தாமொழி: லெமூர் பீச்சில் நேற்று இரவில் எழுந்த ராட்சத அலைகள் கடற்கரையில் இருந்த கடைகளை சூறையாடின. கள்ளக்கடல் எச்சரிக்கையால் லெமூர் பீச்சுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலமான லெமூர் பீச் உள்ளது. இங்குள்ள கடற்கரை அழகை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். இதற்காக கடற்கரையில் டீக்கடை, ஐஸ்கிரீம் விற்பனை கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் குமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு ஏற்கனவே கள்ளக்கடல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்கடல் பிரச்னைக்கு பெயர்போன கடற்பகுதியான லெமூர் பீச்சிலும் நேற்று இரவு முதல் ராட்சத அலைகள் சீறி எழுந்தன.

கரையை விட்டு மேலெழும்பிய அலைகள் கடற்கரையில் இருந்த பல கடைகளை உடைத்து நொறுக்கி இழுத்து சென்றன. சில கடைகளுக்குள் மண் குவியலை விட்டுச்சென்றன. கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கைகள் மீது மண் குவிந்ததால் அவை புதைந்துபோய்விட்டது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பரிதாபமாக காட்சியளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் கடல் அரிப்பு ஏற்பட்டு மணல், கற்குவியலாக காட்சியளிக்கின்றன. இது எதுவும் அறியாமல் இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க வந்தபோது இங்குள்ள நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கவிழ்ந்து உடைந்து கிடக்கும் கடைகளை கண்டு கவலையடைந்தனர். இதுகுறித்து உடனே பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் சேதாரத்தை பார்வையிட்டனர். அதேபோல் இன்றும் கடல் சீற்றம் தொடர்வதால் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் லெமூர் பீச் நுழைவு பகுதியில் உள்ள கேட்டை பூட்டிவிட்டனர். அதில் எச்சரிக்கை வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி செல்பவர்களை எச்சரிப்பதற்காக போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post லெமூர் பீச்சில் கள்ளக்கடல் எச்சரிக்கை; கடைகளை சூறையாடிய ராட்சத அலை: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Black sea ,Lemur Beach ,giant ,Giant waves ,KUMARI DISTRICT ,GANAPATHAPURAM DISTRICT ,LEMUR ,giant wave ,Dinakaran ,
× RELATED கள்ளக்கடல் எச்சரிக்கை:...