×

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சிறப்பு வழிபாடு; திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஜி அமைச்சர் வேலுமணி சத்ரு சம்ஹார யாகம்


திருச்செந்தூர்: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சத்ரு சம்ஹார யாகம் செய்து வழிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் அரசியலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை குரு பார்வை வேண்டியும், இழந்த பதவியை பெறவும் இங்கு அடிக்கடி சிறப்பு தரிசனம் மற்றும் வழிபாடு மேற்கொள்கின்றனர். மேலும் எதிரிகளை வலுவிழக்க செய்ய சத்ரு சம்ஹார யாகமும் நடத்துகின்றனர். இதன் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் விஐபி கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது. அதிமுகவைப் பொறுத்தவரையில் ஆட்சியிலும், பதவியிலும் இருந்த போது திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

தற்போது எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், தற்போதைய தலைமை நிலையச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு யாகம் செய்து வழிபாடு நடத்தினார். இதற்காக நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் வந்து தங்கியிருந்த அவர், நேற்று அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் வழிபட்டார். தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் சத்ரு சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜை மற்றும் புரோகிதர்கள் முன்னிலையில் வள்ளிக்குகை பகுதியில் சத்ரு சம்ஹார யாகமும் நடத்தினார். வழக்கமாக அதிமுக முக்கிய தலைவர்கள் வந்தால் திருச்செந்தூர் கோயிலில் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வர்.

அப்போது அவருடன் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தரிசனத்துக்கு செல்வர். ஆனால் இந்த முறை எஸ்.பி.வேலுமணி கோயில் விருந்தினர் மாளிகையில் தங்குவதை தவிர்த்து கடற்கரை ரிசார்டில் தங்கினார். கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் சிறப்பு யாகம் செய்த அவருடன் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. தரிசனம் முடிந்து வந்த பிறகு கடற்கரை ரிசார்டில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் சந்தித்தனர்.

கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கும் அவர், திருச்செந்தூர் வந்து உள்ளூர் கட்சி நிர்வாகிகளையே அழைக்காமல் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் செய்து வழிபட்டது அதிமுகவினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

The post லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சிறப்பு வழிபாடு; திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஜி அமைச்சர் வேலுமணி சத்ரு சம்ஹார யாகம் appeared first on Dinakaran.

Tags : Anti-Bribery Department ,Maji Minister ,Velumani Satru Samhara ,Murugan Temple ,Thiruchendur ,Former Minister ,S. B. ,Thiruchendoor ,Subramaniya Swami Temple ,Corps ,Anti- ,Department ,
× RELATED சிவகாசி வட்டாரப் போக்குவரத்து...