×

அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை: அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உடன்பாடு ஏற்பட்டு சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சாம்சங் தொழிலாளர்கள் செப்டம்பர் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி, அமைச்சர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத் தரப்பு மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில், தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப் பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலைநிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக அறிவி்த்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது என அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர்கள் கூட்டாக கூறியதாவது: தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் பிரச்னைகள் ஏற்பட்டு பல்வேறு நிலைகளில் 8 முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுமூகமான நிலை எட்டியுள்ளதையடுத்து ஒப்பந்தத்தில் ைகயெழுத்திட்டுள்ளனர். நாளை மறுநாளை முதல் வேலைக்கு செல்வதாக தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றனர். அதைத் தொடர்ந்து சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று 4 அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. பேச்சுவார்த்தையில் சில நல்ல முடிவுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் வந்துள்ளோம். அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Samsung ,Chennai ,Minister ,Velu ,K. ,Dinakaran ,
× RELATED சாம்சங் தொழிலாளர் சங்க பதிவு : பதிவுத்துறைக்கு ஆணை