×

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் முன்னெச்சரிக்கை திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு


குலசேகரம்: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோதையாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடற்கரைக்கு அடுத்தபடியாக புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவி. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு தண்ணீர் விழுவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. அருவிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடிவரும் கோதையாறு திற்பரப்பு அருவியுடன் இணைந்து தண்ணீராக கொட்டுகிறது.

அதேபோல் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் திற்பரப்பு அருவிக்கு வருகிறத. ஆகவே சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது மட்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பேச்சிப்பாறை அணையில் (48 அடி கொள்ளளவு) நீர்மட்டம் தற்போது 43.75 அடியாக உள்ளது.

அணைக்கு 564 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து கால்வாய் வழியாக 551 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று மாலை 6 மணி முதல் மறுகால் ஷட்டர் வழியாக 246 கன அடி தண்ணீர் கோதையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் மேலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக திற்பரப்பு அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அருவியின் நுழைவு வாயில் மூடப்பட்டு எச்சரிக்கை வாசகம் அடங்கிய பலகை தொங்கவிடப்பட்டு உள்ளது. இன்று காலையில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

The post தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் முன்னெச்சரிக்கை திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Tilparapu Falls ,Kodaiyar ,Kulasekaram ,Tilparapu ,Kumari district ,Dinakaran ,
× RELATED குலசேகரம் அருகே டெம்போவை...