×

தண்டையார்பேட்டை மண்டலத்தில் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது இதில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் கலந்துகொண்டு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கூறுகையில், ‘‘மழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் மண்டபங்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, குறித்த நேரத்தில் உணவு அளிப்பதற்காக அனைத்து இடங்களிலும் சமையலறை மற்றும் சமையல்காரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழை பாதிப்பின் போது தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும், அதேபோல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு ராட்சத மோட்டார்களை வைத்து தேங்கும் தண்ணீர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

சாலைகள் பழுதடைந்தால் உடனடியாக சரி செய்யவும், அதிகாரியிடம் தெரிவித்தார் ஊழியர்கள் விடுமுறை இன்றி பணிக்கு வர வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, தண்டையார்பேட்டை மண்டல கண்காணிப்பு அதிகாரி கண்ணன், மண்டல உதவி ஆணையர் சரவணமூர்த்தி உள்பட மாநகராட்சி, வருவாய் துறை, குடிநீர் வாரிய மின்வாரியம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தண்டையார்பேட்டை மண்டலத்தில் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet ,Thandaiyarpet ,North East Monsoon ,RK Nagar ,Perambur ,Rayapuram ,Regional Committee ,Netaji Ganesan ,Dinakaran ,
× RELATED மண்ணடியில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்