- பரந்தூர் பசுமைக் வானூர்தி நிலையம்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- பரந்தூர்
- பரந்தூர் பசுமை விமான நிலையம்
- தின மலர்
காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிக்காக அனுமதியின்றி நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பினையும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை நாளிதழ்களில் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தினால் தங்கள் குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும் எனக்கூறி நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்மகளைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு, நிலம் எடுப்பதற்கான 20 ஆட்சேபனைகளையும் மனுக்களாக வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், கிராம மக்களின் போராட்டங்கள் பற்றி கவலைப்படாமல், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக வீடுகள், நிலங்களை கையகப்படும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனை கண்டிக்கும் வகையில், பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தால் பாதிக்கப்படுகின்ற அனைத்து கிராம மக்களும் இணைந்து குடியிருப்புகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களுடயை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு மற்றும் கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று கண்டன போராட்டம் நடத்தினர்.
இதில், உடனடியாக மச்சேந்திரநாதன் கமிட்டி அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம், வீடுகள் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன், நிர்வாகிகள் செல்வம், ஆனந்த், முருகேசன், ஆனந்தராஜ், பழனி, சரவணன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அனுமதியின்றி நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு: கருப்பு கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.