*விவசாயிகள் வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி : மெணசி பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள வாணியாறு கிளை கால்வாையை மீட்டு, தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான ஏற்காடு மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு சில நாட்களில் வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது.
அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக பெருக்கெடுத்துச் செல்லும். இடதுபுற கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீர் வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், விழுதப்பட்டி, மெணசி, பூதநத்தம், ஆலாபுரம், ஜம்மனஅள்ளி உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும். ஆனால், மெணசி பகுதி விவசாயிகளுக்கு இந்த உபரிநீர் எட்டாக்கனியாகவே உள்ளது. மெணசி, விழுதிப்பட்டி அருகே அப்புகல் மலை அடிவாரத்தில் இடதுபுற கால்வாயில் இருந்து கிளை கால்வாய் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த கிளை கால்வாயை முறையாக பராமரிக்காமல் விட்டதால், புதர்மண்டி காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், அணை கட்டப்பட்டு இதுவரை 3 முறை மட்டுமே இந்த கிளை கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றுள்ளது. கால்வாய் தூர் வாரப்படாததால் பல ஆண்டுகளாக இதன் வழியாக தண்ணீர் செல்லவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாயை உரிய முறையில் பராமரிக்க வில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் பராமரிப்பு செலவிற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறாததால் புதர்மண்டி கால்வாய் இருக்கும் இடம் தெரியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, வாணியாறு இடதுபுற கிளை கால்வாயை தூர்வாரி, தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கிளை கால்வாயை தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.