மதுராந்தகம்: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அச்சிறுப்பாக்கத்தில் மீண்டும் மாட்டு சந்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்த சந்தைக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் உழவு செய்யவும், பால் உற்பத்தி செய்யவும் மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் இந்த மாட்டுச்சந்தையில் சுமார் ரூ.25 லட்சம் வரை மாடுகள் விற்பனை களைகட்டி இருந்தது. தற்போது ஏர் உழுவது இயந்திரமயமானதாலும், மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததாலும், கடந்த கொரோனா பாதிப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாட்டுச் சந்தை செயல்படாமல் போனது. மேலும், தற்போது அந்த பகுதியில் காய்கறிச் சந்தை மட்டுமே ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏராளமாக செயல்படுவதால் அங்கு விவசாயம் முற்றிலும் குறைந்தது. ஆனால் மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் மட்டும் முழுமையாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, அச்சிறுப்பாக்கத்தில் மீண்டும் கால்நடை சந்தையை உருவாக்கி அங்கு மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்யவும், வாங்கிச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
The post கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க கோரிக்கை appeared first on Dinakaran.