×

தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எப்படி நடைபெறுகிறது?: அனைத்து வார்டுகளிலும் நிவாரண முகாம்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதிப்படையாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை சென்னை ரிப்பன் மாளிகையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர், நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீ.க்கு மேலான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

பொதுமக்களுக்கான பிரத்யேக உதவி எண்ணாக 1913 வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 நபர்கள் 4 சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குவர். அவசர உதவி எண் தவிர, சமூக ஊடகம், வாட்ஸ்ஆப், ‘நம்ம சென்னை’ தளம் போன்றவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும். அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 100 குதிரைத் திறன் கொண்ட 100 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள் தாழ்வான பகுதிகளில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கக்கூடியவை என்று கண்டறிப்பட்டுள்ள 31 ரயில்வே சிறிய பாலங்கள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சார்பில் “டி.என்.அலர்ட்” (TN ALERT) என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து மழைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 356 நீரேற்று நிலையங்களும் ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், தூர்வாரும் இயந்திரங்கள், சூப்பர் சக்கர் உள்ளிட்ட 373 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் கூடுதலாக 83 கழிவுநீர் அகற்றும் வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

மழைநேரத்தில் தமிழ்நாடு அரசு தருகிற வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், மக்களுக்கு பொறுப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும். நாம் அனைவரும் கரம் கோர்த்து, இந்த மழைக்காலத்தில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வின்போது, மேயர், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

The post தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எப்படி நடைபெறுகிறது?: அனைத்து வார்டுகளிலும் நிவாரண முகாம்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Indian Meteorological Department ,Monsoon ,Chennai Municipal Corporation ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED 7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு...