×
Saravana Stores

ரத்தன் டாடா மறைவு தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்திய தொழில் துறையின் முன்னோடிகளில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவராக நீண்டகாலம் பொறுப்பேற்று, மகத்தான சாதனைகளை புரிந்தவருமான ரத்தன் டாடா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ் தலைவர்): ரத்தன் டாடா தொழில் வளர்ச்சியோடு, வருமானத்தை பெருக்குகிற அதேநேரத்தில், தொழிலாளர் நலன், சமூக நலனில் அக்கறை காட்டக்கூடிய மனிதநேயப் பண்பாளராகத் திகழ்ந்தவர். இந்தியாவில் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த பண்பாளரை, சிறந்த தொழிலதிபரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
டாக்டர் ராமதாஸ்(பாமக நிறுவனர்): இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாடா அவர்களை விலக்கி விட்டு எழுத முடியாது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992ம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாடா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புரவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாடா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
பிரசிடெண்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): எங்களைப் போன்ற லட்சக்கணக்கான தொழில் முதலீட்டாளர்களின் வழிகாட்டி. தான் சேர்த்த பணத்தை இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் மனிதாபிமானமிக்க மனிதராய் வாழ்ந்து; வாழு! வாழ விடு! என்ற வகையில் தன் வாழ்க்கையை பிறர்க்கு பாடமாய் எடுத்துச் சொன்ன பிதாமகன்.
ஏ.சி.சண்முகம் (புதியநீதிக் கட்சி தலைவர்): பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவதில் அவருக்கு நிகர் இனி யாரும் பிறக்க வாய்ப்பு இல்லை. அன்பு, அமைதி, அடக்கம், பணிவு, தொலைநோக்குப் பார்வை என தன் விசாலப் பார்வையால் உலகம் முழுக்க இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர். அவர் மறைந்தாலும் அவர் விதைத்த விதைகள் ஒருநாளும் உறங்குவதில்லை; விதைகள் விருட்சமாகட்டும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம்.

The post ரத்தன் டாடா மறைவு தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ratan Tata ,Chennai ,Tata Group ,Wealthy ,Congress ,Dinakaran ,
× RELATED அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா...