*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சியில் 17 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி பரப்பளவில் மிகப்பெரிய நகராட்சியாகும். இதன் மொத்த பரப்பு 52.25 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
இந்நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகராட்சியில் மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரி விதிப்புகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரிவிதிப்புகள் குடியிருப்புக்களுக்கான வரி விதிப்புக்களாகும். சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் இந்நகராட்சியில் உள்ளன.
இந்த நகராட்சியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் பெரும்பாலான கழிவுகள் பாப்பான்கால்வாய், சீவலன்கால்வாய் உள்ளிட்ட பாசனக்கால்வாய்கள் மூலமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த பாசனக்கால்வாய்கள் கழிவு நீரோடையாகி மாறி வருகிறது. இதனால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் வசதியில்லாததால் தெருக்களில் கழிவுநீர் விடப்படும் நிலையும் இருந்து வருகிறது.
இந்த பிரச்னைகளை தீர்க்கும் விதமாக கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற கடையநல்லூர் நகர்மன்றக்கூட்டத்தில் பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட வசதியாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான செலவினத்தை நகராட்சி நிர்வாகத்தின், குடிநீர் வழங்கல் துறை திட்ட தயாரிப்பு நிதியிலிருந்து செலுத்தவும் நகர்மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து 44.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடையநல்லூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை தயார் செய்து நகராட்சிக்கு அனுப்பியது. இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக மேலக்கடையநல்லூர், பாலூரணி, கழிவு நீரேற்றும் நிலையங்கள் அமைக்க மேலக்கடையநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் நகராட்சி பழைய உரக்கிடங்கில் 3.5 ஏக்கர் இடத்தையும் தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட அந்த இடங்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு ஒப்புதல் வழங்கி நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செலவினம் அதிகரித்ததன் விளைவாக, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட ரூ. 53.06 கோடி செலவாகும் என குடிநீர் வடிகால் வாரியம் மறு ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான கட்டணம் ரூ.59.10 லட்சத்தை, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்த நகர்மன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கியும் 12 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் பணிகள் நடைபெறவில்லை.
இவ்வாறு 2007ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் 17 ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடக்கிறது. எனவே கடையநல்லூர் பொதுமக்களின் நலன் கருதி விரைவில் பாதாளச்சாக்கடை திட்டத்தை விரைந்து துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் பணி தொடங்கும்
இது குறித்து நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மானிடம் கேட்ட போது, ‘நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடையநல்லூர் நகராட்சி பகுதியில், குறிப்பாக விடுபட்ட பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசிடம் பல கோடி ரூபாய் நிதி பெற்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதாள சாக்கடை திட்டம் குறித்து நானும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வருகிறேன். இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கும் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். நிதி ஒதுக்கீடு செய்த உடன் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
The post கடையநல்லூர் நகராட்சியில் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? appeared first on Dinakaran.