×

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் 0.85 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட காங்.

சண்டிகர்: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 0.85 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றியை கோட்டை விட்டுள்ளது. அதே சமயம், தனித்து ஆட்சி அமைத்தாலும் பாஜ நூலிழையில் வெற்றியை வசமாக்கி இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், மொத்தம் 90 இடங்களில் பாஜ 48 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டதால் வாக்குகள் சிதறியது காங்கிரசின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதையே வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்தி உள்ளன. கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலை விட பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது 90 இடங்களில் பாஜ 40ல் வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 36.49 ஆக இருந்தது. இம்முறை 48 இடங்களில் வென்ற நிலையில் பாஜவின் வாக்கு சதவீதம் 39.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே காங்கிரஸ் கட்சி கடந்த 2019ல் 31 இடங்களில் வென்ற போது 28.08 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் இம்முறை 37 தொகுதிகளில் வென்ற நிலையில் 11 சதவீதம் அதிகரித்து 39.09 சதவீதமாகி உள்ளது.

பாஜ, காங்கிரஸ் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் 0.85 சதவீதம் மட்டுமே. ஆம் ஆத்மி கடந்த தேர்தலில் 0.48 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் இம்முறை எந்த தொகுதியிலும் ஜெயிக்காவிட்டாலும் 1.79 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும்.

மற்ற கட்சிகளை பொறுத்த வரையில் 2 இடங்களில் வென்ற இந்திய தேசிய லோக் தளம் கடந்த தேர்தலில் 2.44 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் இம்முறை 4.14 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதுவே, ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 2019ல் 15 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது 0.90 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. ஜாட் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான அக்கட்சி கடந்த 2019ல் 10 தொகுதியில் வென்று கிங் மேக்கராக இருந்த நிலையில் இம்முறை ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

கடந்த தேர்தலில் 0.52 ஆக இருந்த நோட்டா வாக்கு சதவீதம் இந்த முறை 0.38 சதவீதமாக உள்ளது. இதே போல 2024 மக்களவை தேர்தலிலும் அரியானாவில் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் போட்டியே காணப்பட்டது. மொத்தம் 10 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 5 இடங்களில் வென்றன. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 46.11 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 43.67 சதவீத வாக்குகளையும் பெற்றன. இந்தியா கூட்டணியில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

* எதிர்பாராத முடிவு குறித்து காங். ஆய்வு

அரியானா தேர்தல் முடிவு குறித்து நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘அரியானாவின் எதிர்பாராத தேர்தல் முடிவு குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக பல சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம்’’ என்றார்.

* அதிகம், குறைவு

அரியானா தேர்தலில் நுஹ் மாவட்டத்தில் உள்ள பெரோஸ்பூர் ஜிர்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் 98,441 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் நசீம் அகமதுவை தோற்கடித்தார். இதுவே அதிகபட்ச வாக்கு வித்தியாசம். சிட்டிங் எம்எல்ஏவான மம்மன் கான் 1,30,497 வாக்குகள் பெற்றார். 2ம் இடம் பிடித்த பாஜ வேட்பாளர் 32,056 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதே போல, உச்சன கலன் தொகுதியில் பாஜ வேட்பாளர் தேவேந்தர் சதார் பூஜ் அத்ரி, காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திர சிங்கை வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதுவே குறைந்தபட்ச வாக்கு வித்தியாசம்.

* 3 சுயேச்சைகளும் பாஜவுக்கு ஆதரவு

அரியானாவில் சாவித்ரி ஜிண்டால், தேவேந்தர் கட்யான், ராஜேஷ் ஜூன் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில், ராஜேஷ் ஜூன் காங்கிரசில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜ வேட்பாளரை வென்றார். சாவித்ரி ஜிண்டால், பாஜவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வென்றுள்ளார். இந்நிலையில், தேவேந்தர் கட்யான், ராஜேஷ் ஜூன் இருவரும் நேற்று அரியானா பாஜ பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த பின் பாஜ அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இதே போல, சாவித்ரி ஜிண்டாலும் அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துள்ளார். இவரும் ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* நெருக்கமான வெற்றிகள்

அரியானாவின் டப்வாலி தொகுதியில் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதித்யா தேவிலால் 610 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் அமித் சிஹாக்கை தோற்கடித்தார். இங்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் 6,567 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தது. லோஹாரு தொகுதியில் காங்கிரசின் ராஜ்பிர் பர்டியா 792 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆதம்பூர் தொகுதியில் காங்கிரசின் சந்தர் பிரகாஷ் 1,268 வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜ வேட்பாளர்களை வென்றனர். தாத்ரி தொகுதியில் பாஜவின் சுனில் சத்பால் சங்வான் காங்கிரஸ் கட்சியின் மனிஷா சங்வானை 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் சந்தர் மோகன் 1,997 வாக்குகள் வித்தியாசத்தில் பஞ்ச்குலா தொகுதியில் பாஜ மூத்த தலைவரும், அரியானா சட்டப்பேரவை சபாநாயகருமான ஜியான் சந்த் குப்தாவை தோற்கடித்தார்.

* கூட்டணி கட்சிகள் காங். மீது புகார்

அரியானா தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசை கூட்டணி கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் கட்சி எம்பி சஞசய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மாநில கட்சிகளின் உதவியை நாடுகிறது. ஆனால் எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ அங்கு மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அரியானாவில் சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தேசியாவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு சீட் கொடுத்து இந்தியா கூட்டணியாக தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் வென்று விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் காங்கிரஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது’’ என்றார்.

ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், ‘‘அடுத்ததாக டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் மற்றும் திமிரான பாஜவுக்கு எதிராக நாங்கள் போட்டியிட எங்களுக்கு முழு தகுதியும் உள்ளது’’ என்றார். காஷ்மீரில் வெற்றி பெற்ற காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘அரியானா தோல்வி குறித்து காங்கிரஸ் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். எப்படி பாஜ 3வது முறையாக ஆட்சியை பிடித்தது? எந்த இடத்தில் வெற்றி நழுவியது? என்பதை காங்கிரஸ் ஆழமாக சிந்திக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஒருபோதும் நம்பக் கூடாது’’ என்றார். பிராந்திய கட்சிகளை அனுசரித்து போகாமல், திமிருடன் நடந்து கொள்வதால் தான் காங்கிரஸ் இத்தகைய தோல்விகளை சந்திப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

* ஒற்றை இலக்கத்திலிருந்து ஹாட்ரிக் வெற்றி

கடந்த 1966ம் ஆண்டு தனி மாநிலமாக அரியானா உதயமான பிறகு அங்கு பாஜ போட்டியிட்ட பல தேர்தல்களில் ஒற்றை இலக்க வெற்றியை மட்டுமே பெற்றது. அதிகபட்சமாக 1987ல் 20 தொகுதியில் போட்டியிட்டு 16ல் வென்றது. அப்போது தேவிலால் தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் ஆட்சியை பிடித்தது. அடுத்ததாக 1991ல் வெறும் 2 இடத்தில் மட்டுமே பாஜ வென்றது. 1996ல் 11 இடத்தை கைப்பற்றியது. இப்படியாக பிராந்திய கட்சிகளே ஆதிக்கம் செலுத்திய அரியானாவில் கடந்த 2014ல் முதல் முறையாக பாஜ 47 இடங்களில் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதன் பின் 2019ல் 40 தொகுதிகளையும் தற்போது 48 தொகுதிகளையும் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

The post அரியானா சட்டப்பேரவை தேர்தலில் 0.85 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட காங். appeared first on Dinakaran.

Tags : Congress ,Aryana assembly election ,Chandigarh ,BJP ,Ariana State Legislative Assembly ,Ariana Legislative Assembly ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...