×

பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதி மாற்ற வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம்

மதுரை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன், எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாளில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் தான் பொங்கலன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜன. 15 மற்றும் 16 தேதிகளில் வருகிறது. ஜன. 14 அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜன. 15ல் திருவள்ளுவர் தினம், 16ல் உழவர் திருநாள் என தொடர் விடுமுறை நாட்களாக இருந்தும் இந்த குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை தமிழர்கள் பண்பாட்டோடும், உழவர்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையது. எனவே, இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது சிரமங்களை தரும். ஆகவே, இந்தத் தேர்வு தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதி மாற்ற வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Pongal Day ,Union Minister ,Madurai ,Union Minister of Education ,Dharmendra Pradhan ,National Selection Agency ,General Director ,Pradeep Singh Karola ,Shu. Venkatesan ,EU ,Dinakaran ,
× RELATED பொங்கல் நாளில் யுஜிசி – நெட் தேர்வு;...