- பெரும்புதூர் ஏரி
- Perumbudur
- காஞ்சிபுரம் மாவட்டம்
- பெரும்புதூர்
- பில்லிப்பாக்கம் ஏரி
- பொதுப்பணித் துறை
- பெரும்புதூர் ஏரி
- தின மலர்
பெரும்புதூர், அக்.9: பெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகாவில் பெரும்புதூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளாகும். பெரும்புதூர் ஏரி 675 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 17.60 அடி ஆழமும் கொண்டது. பிள்ளைபாக்கம் ஏரி 1,096 ஏக்கர் பரப்பும், 0.122 டி.எம்.சி., கொள்ளளவும், 13.20 அடி நீர் மட்ட உயரமும் கொண்டது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த இரண்டு ஏரிகளும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்தன. தற்போது, பிள்ளைபாக்கம் சிப்காட் மற்றும் பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஏரிகளின் நீர்பாசன நிலங்கள் பாதியாக குறைந்துவிட்டன. தற்போது, இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பி வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மேலும் ஒரு டி.எம்.சி., தண்ணீர் வீணாகி கானல் நீராகி வருகிறது. தற்போது, இந்த ஏரியை மக்கள் குளிக்க, துணி துவைக்க மட்டும் ஏரி பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் துவங்கியதும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விடுகிறது. இதனால், மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதனை போக்க பெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரி நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் என்று சமூக ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பெரும்புதூர் தாலுகாவில் பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், வெங்காடு, இருங்காட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த, தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளுக்கு சிப்காட் நிர்வாகம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும்புதூர், பிள்ளைபாக்கம் இந்த இரண்டு ஏரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் மழைநீர் நிரம்பி உபரிநீர் வீணாக வெளியேறுகிறது. மேலும், இந்த இரண்டு ஏரிகளின் விவசாயம் குறைந்த அளவில் மட்டுமே நடைபெறுகிறது.
விவசாயத்திற்கு போக மீதமுள்ள ஏரிநீர் வீணாக தேக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேநிலை நீடித்து வருகிறது. இந்த, ஏரிநீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் பெரிய அளவில் நாட்டம் காட்டவில்லை. சுமார் ஒரு டிஎம்சி தண்ணீர் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரிகள் மூலம் கிடைக்கிறது. இந்த, தண்ணீரை சென்னை மக்களுக்கு சுத்திகரிப்பு செய்து வழங்கினால், சென்னையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு அரசால் சமாளிக்க முடியும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரிகளின் நீரை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளதால் பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளன. பெரும்புதூர் நகராட்சியில் அடங்கிய பெரும்புதூர் ஏரியையும், பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தி வேண்டும்’ என்றனர். மேலும், பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் ஐந்து சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. தற்போது, பெரும்புதூர் பகுதிக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் பெரும்புதூரில், ராமானுஜர் கோயில், ராஜிவ்காந்தி நினைவகம் தவிர மக்கள் கண்டு ரசிப்பதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை. இதனால், பொழுது போக்கிற்காக மக்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். எனவே, பெரும்புதூர் ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளதால், பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளன. பெரும்புதூர் நகராட்சியில் அடங்கிய பெரும்புதூர் ஏரியையும், பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் ஆழபடுத்தி கரையை பலப்படுத்தி வேண்டும்.
கால்வாய் சீரமைக்கப்படுமா?
ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது ஏரி நிரம்பி உபரிநீர் கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. ஆனால், இந்த இரண்டு ஏரிகளின் கால்வாய் முறையாக பராமரிக்கபடுவதில்லை. அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஏரி நிரம்பி குடியிருப்பு வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மழைகாலம் துவங்குவதற்கு முன்பு ஏரிகளின் வரவு கால்வாயை சீரமக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post விவசாய பயன்பாடு இல்லாததால் பெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.